சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.
தற்போதைய சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு காலநிலை மாற்ற சட்டத்துடன் புதிய சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
‘இரண்டு வருட முன்னேற்றம் மற்றும் எதிர்காலம்’ என்ற தலைப்பில் 16.06.2024 ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைக் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
”சுற்றாடல் அமைச்சின் இரண்டு வருட முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் போது எமது அமைச்சின் செயற்பாடுகள் ஏனைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்று ஒரேயடியாக வெளித்தெரிவதில்லை. ஆனால், ஒரு அமைச்சு என்ற வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பல பணிகளைச் செய்துள்ளோம். மேலும் பல முக்கிய பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
அண்மையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, நாடளாவிய சுற்றுச்சூழல் வாரத்தை அறிவித்தோம். அதைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போதைய 29% காடுகளின் அளவை 2030இற்குள் 32% ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். இதற்காக குறிப்பாக காடுகளிலுள்ள வெற்றிடப் பகுதிகளில் மரம் நடுவதற்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ‘மரத்துக்கு ஒரு செடி ‘ திட்டத்தின் கீழ் அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக மரம் நடப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக கவனத்துடன் செயற்பட்டு வருகின்றார். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்றப்படும் எந்த சட்டத்தையும் எக்காரணம் கொண்டும் தலைகீழாக மாற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய சுற்றுச் சூழல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு, காலநிலை மாற்ற சட்டத்துடன் புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும், நாட்டின் பெறுமதிமிக்க கனிம வளங்களை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அவசர வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.