குருநாகல் மாவட்டத்தின் ரணவிரு கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்த்துவைப்பது தொடர்பாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்
குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ரணவிரு கிராமம், சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். யுத்தத்தினால் அங்கவீனமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் என ஆரம்பத்தில் நூறு குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
தற்போதைக்கு சுமார் அறுநூறு குடும்பங்கள் அங்கு வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ள இந்நிலையில் ரணவிரு கிராம மக்களின் காணிகளுக்கு இதுவரை காலமும் காணி உறுதி வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து குருநாகல் நகர மத்தியில் 10.06.2024 அங்கவீனமுற்ற படை வீரர்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் இருநூறு பேரளவிலானோர் குருநாகல் நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் படை வீரர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் கரிசனையுடன் செயற்படுவதாகவும் ஆறுதல் தெரிவித்தார்.
அதன்போது ரணவிரு கிராமம் உள்ளிட்ட அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்கொண்ட போராட்டங்களில், ஆளுனர் ஒருவர் , போராட்டக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலாவது சம்பவம் இதுவாகும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
போராட்டக்காரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, துரித கதியில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் இதன் போது உறுதியளித்தார். அதனையடுத்து போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
கௌரவ ஆளுனரின் ஊடகப் பிரிவு-