நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இல்லையெனில் எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியாத உற்பத்திகளை கைவிடுவதே சிறந்ததெனவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் 06.06.2024 பிற்பகல் நடைபெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முன்னோடித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களின் கீழ் உள்ள திட்டங்கள், இளைஞர் விவசாய-தொழில்முனைவோர் கிராமங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவை அடங்கும்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி சந்தைக்கான பொருட்களை போட்டித்தன்மையுடன் வழங்குவதும், அதன் மூலம் ஏற்றுமதிச் சந்தையை வெல்வதும், அந்நியச் செலாவணி மற்றும் விவசாயப் பொருளாதாரத்தை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் இலக்குகளாகும்.
இந்த இலக்குகளை அடைவதற்காக, குரங்குகள் மற்றும் காட்டு யானைகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு பொருத்தமான பொறிமுறையைத் தயாரிப்பது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது.
எதிர்கால ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பம் இன்றியமையாதது எனவும், விவசாய நிலங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை எனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தனியார் துறை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை எனும் தனித்துவத்துடன் கூடிய பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எஸ்.எச். சமரதுங்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பி.எல். ஏ. ஜே. தர்மகீர்த்தி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் தர்ஷன படிகோரள, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே. என். குமாரி சோமரத்ன உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் வர்த்தக ரீதியிலான விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தனியார் துறை பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.