எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் சென்ற முறை போன்று இம்முறையும் புத்தளம் நகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளர்.
உழ்ஹிய்யா காலங்களில் ஏற்படுகின்ற வீணான பிரச்சினைகள், அசௌகரியங்களை தடுப்பது தொடர்பாக புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சமூக பொலிஸ் பிரிவு, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜம்யிய்யதுல் உலமா புத்தளம் கிளை ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி விடயம் எட்டப்பட்டது.
எனவே உழ்ஹிய்யா கடமைக்காக மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் எதிர்வரும் 12.06.2024 ஆம் திகதிக்கு முன்னதாக நகர சபைக்கு சமுகமளித்து அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உரிய நேரத்தில் அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறும், அவ்வாறு அனுமதிகளை பெற்றுக்கொள்ளாது உழ்ஹிய்யா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
மேலும் உழ்ஹிய்யா பிராணிகளின் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை முற்றாக தவிர்ந்துகொள்ளுமாறும், அந்தக் கழிவுகளை போடுவதற்காக நெடுங்குளம் மைதானத்தில் வெட்டப்பட்டுள்ள பிரத்தியேக குழிகளிலும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ட்ரக்டர் வண்டிகளிலும் போடுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13 ஆம் நாள் சூரியன் மறையும் வரை முஸ்லிம்கள் இந்த உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.