நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 2,59,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களிலுள்ள 68,857 குடும்பங்களைச் சேர்ந்த 2,59,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 24 பேர் உயிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளார்.
மேலும், 52 வீடுகள் முற்றாகவும், 5,247 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 397 குடும்பங்களைச் சேர்ந்த 2,178 பேர் 12 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.