வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் வழிகாட்டுதல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
தீங்கு விளைவிக்கும் பற்றீரியாக்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடிய குப்பைகள் இருக்கலாம் என்பதால் வெள்ள நீரில் நடப்பதையோ நீந்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தின் ஊடாக பயணிக்கும் போது லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுக்களை தடுக்க இயன்றவரை இறப்பர் பூட்ஸ் மற்றும் கையுறைகளை அணிய முயற்சிக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
செய்யக்கூடாதவை:
1. முடிந்தவரை வெள்ள நீரைத் தவிர்க்கவும்: வெள்ள நீரில் நடக்கவோ நீந்தவோ கூடாது. இதில் தீங்கு விளைவிக்கும் பற்றீரியாக்கள் மற்றும் காயத்தை ஏற்படுத்தும் குப்பைகள் இருக்கலாம்.
2. வெள்ளத்தால் சேதமடைந்த உணவுகளை உண்ணாதீர்கள்: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள காய்கறிகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய உணவை பயன்படுத்த வேண்டாம்
3. குழந்தைகள் வௌ்ளநீரில் விளையாடுவதை முடிந்தவரை தவிர்க்கவும்: நோயைத் தடுக்க குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் அசுத்தமான தண்ணீரிலிருந்து விலக்கி வைக்கவும்.
4. அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்: உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருத்துவரை நாடுவதை தாமதிக்காதீர்கள்.
5. அழுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: வெள்ள நீரை குடிக்க, சமைக்க அல்லது குளிக்க பயன்படுத்த வேண்டாம்.
பின்பற்ற வேண்டியவை:
1. பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே அருந்தவும்: நீரினால் பரவும் நோய்களைத் தவிர்க்க, குறைந்தபட்சம் 1 நிமிடம் கொதிக்க வைத்த தண்ணீரை அல்லது போத்தல் தண்ணீரைப் பயன்படுத்தவும். கிணற்று நீரை முடிந்த வரை தவிர்க்கவும்.
2. செய்திகளை அறிந்து வைத்திருக்கவும் : உள்நாட்டு செய்திகள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை புதுப்பித்த நிலையில் இருக்கவும்.
3. நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தல்: வெள்ள நீர் நுளம்பு உற்பத்தியை அதிகரிக்கும். எனவே, உங்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றவும்.
4. பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்: வெள்ளநீரில் அலையும் போது லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களைத் தடுக்க முடிந்தவரை ரப்பர் பூட்ஸ் மற்றும் கையுறைகளை அணிய முயற்சிக்கவும்.
5. உணவைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும்: உணவு மாசுபடுவதைத் தடுக்க, வெள்ளம் ஏற்படாத பகுதிகளில் உணவைச் சேமித்து வைக்கவும் அல்லது தண்ணீர் புகாத கொள்கலன்களில் உணவை சேமிக்கவும்.
6. உங்கள் கைகளை கழுவவும்: உங்கள் கைகளை எப்போதும் சவர்க்காரம் இட்டு கழுவவும், குறிப்பாக சாப்பிடுவதற்கு முன் அல்லது உணவு தயாரிக்கும் முன்.
7. வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்: உங்களுக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவும்.