தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும்அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறும்.
இந்த மாநாடு கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையினால் நடத்தப்பட இருப்பதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
சீனாவின்ஷென்ஸன் வட்டமேசை மாநாடு வருடாந்தம் நடைபெற்று வருவதோடு ஒற்றுமையுடன் ஒன்றாக பயணித்து பட்டுப்பாதையின் ஞானத்தை பெறுவோம் (Walk Together in Harmony and Gather the Wisdom of the Silk Road) என்ற தொனிப்பொருளின் கீழ் 22 நாடுகளின் பங்கேற்புடன் இம்முறை மாநாடு இலங்கையில் நடைபெறும் என்றும் இதன் போது அறிவிக்கப்பட்டது.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
பௌத்த மற்றம் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தொடர்புள்ள அரச நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்கள்.