இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
29.05.2024 முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை” எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டினார்.
உலக வங்கி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வட்டமேசைக் கலந்துரையாடல், இலங்கையின் வலுசக்தி மாற்றம் குறித்து கலந்துரையாடும் தளமாக அமைந்தது.
அண்மையில் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் (Pricewater house Coopers) பசுமை ஹைட்ரஜன் தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையின் மீது கவனத்தை செலுத்திய ஜனாதிபதி, அந்த அறிக்கையின் முக்கியத்துவத்தையும், வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேலும் ஊக்குவிக்கும் விரிவான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அதன்போது, உள்நாட்டு நிபுணத்துவத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இதில் முக்கிய பங்களிப்பை ஆற்றுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார மறுசீரமைப்பு சட்டமூலம் மற்றும் காலநிலை மாற்ற சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.