( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கையில் தமிழ்க் கவிஞர்களுக்கான தேசிய அமைப்பான “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும், “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும், (26) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 07, ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
“வகவத்” தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கிய இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில், ஈஸ்வரன் பிரதர்ஸ் தலைவர் கணேஷ் ஈஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
“வகவ” சிரேஷ்ட ஸ்தாபகர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார். சிறப்பதிதிகளாக தினகரன்/தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், வீரகேசரி/வீரகேசரி வாரவெளியீடு பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், “ஞானம்” சஞ்சிகையின் ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் திருமதி எம்.ஜே. பாத்திமா ரினூஷியா, கெப்பிட்டல் டிவி/கெப்பிட்டல் எப்.எம். பிரதானி ஷியாஉல் ஹசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
விசேட பேச்சாளராக, சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா கலந்து கொண்டார். வரவேற்புரையை, “வகவ” தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன் நிகழ்த்தினார். “வகவப்” பொருளாளர் கவிஞர் ஈழகணேஷை பொன்னாடை போர்த்தி, “வகவ விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இச்சிறப்பு நிகழ்வில், 122 வகவக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும் இடம்பெற்றது. நூலின் முதற்பிரதி, பிரதம அதிதி கணேஷ் ஈஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது அமர்வாக இடம்பெற்ற 100 ஆவது கவியரங்கிற்கு, “தமிழ்த் தென்றல்” அலி அக்பர் தலைமை தாங்கினார். கவிஞர்கள் எம்.எஸ். அப்துல் லதீப், வாசுகி வாசு, “சட்டத்தரணி” ரஷீத் எம். இம்தியாஸ், கம்மல்துறை இக்பால், ஈழகணேஷ், “பிறைக்கவி” முஸம்மில், ராஜா நித்திலன், “கலாபூஷணம்” மஸீதா அன்சார், சுதர்ஷனி பொன்னையா, தி. ஸ்ரீதரன், வாழைத்தோட்டம் எம். வஸீர், ந. தாமரைச் செல்வி, “சிந்தனைப் பிரியன்” முஸம்மில், லைலா அக்ஷியா ஆகியோர் கவிதைப் பூக்களால் சபையை அலங்கரித்தனர்.