“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 26.05.2024 காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது.
“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதன் முதற்கட்டமாக இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட முன்னெடுப்பாக உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் மூன்று வருடங்களில் நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்கள் தமது வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் மயமாக்குவதாகும் எனவும் அது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நேரடியாகப் பங்களிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
1935 முதல், மக்களுக்கு விவசாயம் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும் காணிகளின் உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் முழுமையான உரிமை வழங்கப்படவில்லை. எனவே, உங்களுக்கு முழு உரிமையுடன் காணிஉறுதி வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முழு உரிமையுடன் காணி உறுதிப் பத்திரம் வழங்கினால் மக்கள் நிலத்தை விற்றுவிடுவார்கள் என்று பலர் கூறினர். இரண்டு தலைமுறைகள் அனுபவித்த நிலத்தை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அந்த நெருக்கடியின் காரணமாக இந்நாட்டில் சுமார் எழுபது சதவீத மக்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இன்று வழங்கப்படும் காணி உறுதியினால் உங்களின் சொத்து மதிப்பு உயரும்.
இந்த நிலங்களைப் பயன்படுத்தி நவீன விவசாயத்தை உருவாக்க பங்களிக்க வேண்டும். இதனூடாக நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க முடியும். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போது நீங்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாக இது இருக்கும். மல்வத்து ஓயா திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மன்னார் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையை இதனைவிட இலகுவாக மேற்கொள்ள முடியும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.