அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
அதன்படி சந்தேகநபரின் புகைப்படத்தையும் காவல்துறையினர் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற 46 வயதுடைய குறித்த நபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் இலக்கமான 071 859 17 53 அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரியின் 071 859 17 74 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு இருபது இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் வழங்குபவரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த நால்வருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.