நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 25.05.2024 முற்பகல் திறந்து வைக்கப்பட்டது .
2006 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார வசதிகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை மாவட்டத்தில் 150,000 இற்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.
இன்று திறந்து வைக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு மையம், வடக்கில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் பிரசவத்தை மேம்படுத்துவதுடன், புதிதாகப் பிறந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வடமாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்தும்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பான நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை அவதானிப்பதிலும் இணைந்துகொண்டார்.
பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான் இந்த திட்டத்தை ஆரம்பித்தாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியால் அந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை ஆனால் இன்று வெற்றிகரமாக நிறைவுசெய்து பெண்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு பாராளுமன்றத்தில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.