இஸ்மதுல் றஹுமான்
200 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயதான இப் பெண் கணக்காளராக தொழில் செய்பவராவர்.
இப் பெண் கொக்கேய்ன் போதைப் பொருள் பொதிகளுடன் இத்தியோப்பா அடிஸ் அபாபா நகரில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கட்டார் நாட்டின் தோகா நகருக்கு வந்து அங்கிருந்து கட்டார் விமான சேவையின் கிவ்.ஆர். 654 இலக்க விமானத்தில் 21 ம் திகதி மாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப் பொதியில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா பக்கட்டுக்களில் சூசமாக போதைப்பொருளை மறைத்துவைத்து கொண்டுவந்து உள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மூன்று பார்சல்களிலும் 2 கிலோ கிராம் 861 கிராம் நிறையுடைய கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச புலனாய்வுத் துறையினரினால் சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவருக்கு அவரது தோலி ஒருவரே இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்துள்ளதாகவும் இந்தப் போதைப் பொருள் பொதிகளை இலங்கைக்கு கொண்டுவந்து கொடுப்பதற்காக ஆயிரம் அமெரிக்க டொலர் பணம், விமான பயணத்திற்கான டிக்கட், இலங்கையில் 5 நாட்கள் உல்லாசப்பயண ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்வதாக போதைப் பொருள் வலையப்பின் உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளன.