யாழ்ப்பாணம், பன்னாலையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் 21.05.2024 காலை 10 மணியளவில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸார் பொதுச் சுகாதார பரிசோதகர்களை மீட்டதுடன் ஆண், பெண் என இரண்டு தொழிற்சாலை பணியாளர்களை கைது செய்தனர்.
அந்த தொழிற்சாலை இதுவரை முறைப்படியான அனுமதிகளை கொண்டிருக்கவில்லை என்பதுடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்ததாகவும் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கையை எடுக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் தொழிற்சாலைக்குள் வைத்து உரிமையாளர்கள் பூட்டிவிட்டனர்.
இது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர், தெல்லிப்பளை பொலிசார் தலையிட்டு, பொதுச்சுகாதார பரிசோதகர்களை மீட்டெடுத்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தொழிற்சாலை உரிமையாளரும், பெண்ணும் தலைமறைவான நிலையில், 21.05.2024 மாலை இருவரும் தெல்லிப்பளை பொலிசரால் கைது செய்யப்பட்டனர்.