யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’ என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
காட்டு யானை-மனித மோதல்களை கட்டுப்படுத்த அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் 20.05.2024 இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
இங்கு யானை – மனித மோதல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த மோதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் மின்சார வேலிக்கு மேலதிகமாக, மோதல்கள் அதிகம் இடம்பெறும் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறுவடை மேற்கொள்ளப்படும் சமயம் வரை மாத்திரம் உரிய விவசாய நிலங்களைப் பாதுகாக்க தற்காலிக விவசாய மின்வேலி (Agro Fence) அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், காட்டு யானை- மனித மோதல்கள் அதிகம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மின்வேலிக்கான(Village Fence)முன்னோடித் திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் நேரத்தில் அறுவடை செய்த பின் விவசாய மின் வேலியை (Agro Fence) அகற்ற வேண்டும். மின்வேலியின் பராமரிப்பு மற்றும் பொறுப்பை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்குவதுடன், கிராம வேலியின்(Village Fence) பொறுப்ப மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்குவது எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பெரஹரா என்பவற்றுக்காக யானைகளை வழங்குகையில் தனியாரிடமுள்ள யானைகளுக்கு மேலதிகமாக, பழக்கப்பட்ட யானைகளைக் கொண்ட பட்டியலொன்றை பேணுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதில் எழும் சிக்கல்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கையளிப்பதற்காக தயார்படுத்துமாறும் சாகல ரத்தாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் காட்டு யானைகள் மனித கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர்களான கலாநிதி சுமித் பிலபிட்டிய மற்றும் கலாநிதி பிரிதிவிராஜ் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.