கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், புதிய அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை 15.05.2024 காலை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் சட்ட கட்டமைப்பின் செயற்பாட்டில் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தின் காரணமாக தெல்தெனிய நகரிலிருந்த பழைய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நீரில் மூழ்கியது. அடுத்து தெல்தெனிய கரலியத்த புதிய நகர நிர்மாணித்தின் போது தெல்தெனிய நீதிமன்ற கட்டிடம் உடைத்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் நீதி அமைச்சினால் இந்த புதிய நீதிமன்ற வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடம் கொண்ட தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தில், நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் ஏனைய வசதிகள் உள்ளன.தெல்தெனிய, ரங்கல, உடுதும்பர, பல்லேகல, மெனிக்ஹின்ன, வத்தேகம மற்றும் பன்வில ஆகிய பொலிஸ் பிரிவுகளின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும்.
தெல்தெனிய நகரிலுள்ள தெல்தெனிய கூட்டுறவு காணியில் உள்ள கட்டிடத் தொகுதியில் தெல்தெனிய நீதிமன்றம் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில், அந்த இடத்தில் வசதிகள் இன்மையால் வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த நிலையில், இந்தப் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. நினைவுப் படிகத்தைத் திரைநீக்கம் செய்து, புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.
தெல்தெனிய சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியது. சட்டத்தரணிகளுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.