பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை 14.05.2024 காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன் AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்பட உள்ளது.
இந்த புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் பதிவிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
இலங்கையை அண்டியுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான சட்ட வரைபுக்கு 13.05.2024 அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.