தென்னிலங்கையின் அரசியல் பலத்தைப் பரீட்சிக்கும் அல்லது புடம்போடும் செயற்பாடுகளாக சனல்-4 காணொளி காணப்படுகிறது. தமிழ் தரப்புக்கோ, தவறவிட்ட சந்தர்ப்பத்தை தூக்கிப்பிடிக்க கிடைத்த வாய்ப்பாக இருக்கிறது இந்த சனல்-4. மொத்தத்தில் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போலுள்ளது இலங்கையின் இன்றைய நிலை. இந்தக் காணொளிகளின் எதிரொலிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்விலும் எதிரொலித்ததால் இலங்கையே இன்று பேசுபொருள். இதனால்தான், ஐரோப்பா அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இதற்குப் பின்னாலிருந்து செயற்படுவதாக பௌத்த தேசியவாதம் சந்தேகிக்கிறது. இந்தளவுக்கு நிலைமைகள் களம் மாறியுள்ளன.
முள்ளிவாய்க்கால் யுத்தக்குற்றப் போரில் இலங்கையை சர்வதேசப் பொறிக்குள் மாட்டிவிடும் முயற்சிகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இது, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு சர்வதேச நீதி கோரும் நிலைப்பாடுகளில் சிறு தடங்கல் அல்லது பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இப்போது நடைபெறும் மனித உரிமை அமர்விலாவது இலங்கையை சர்வதேசத்தின் கடிவாளத்தில் சிக்கவைக்க கங்கணங்கட்டி நிற்கின்றன சில சக்திகள். இதற்குப் போடப்பட்டதே இந்த ஈஸ்டர் போடுகாய்.
உலகில் முன்னணிப் பெரும்பான்மைச் சமூகமான கிறிஸ்தவர்கள் மற்றும் கத்தோலிக்கர்களைக் காவுகொண்ட இந்த ஈஸ்டர் தாக்குதலைச் சந்தைப்படுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை இலகுவில் ஈர்த்துவிடுவதையே புலம்பெயர் தமிழர்கள் நாடுகின்றனர். மட்டுமன்றி வல்லரசுகளின் வளைச்சலுக்கும் இலங்கையை முடக்கிவிட மூலவழியும் இதுதான். நாஸ்திகம் பேசினாலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிறிஸ்தவத்தின் மடியில்தானே வளர்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உசுப்பேற்றும் அளவுக்கு பௌத்த தீவிரவாதம் இலங்கையிலிருக்கிறது. இந்த பௌத்த அடிப்படைவாதமும் சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்கமுமே தென்னிலங்கையைப் பிடியில் வைத்துள்ளது. இந்தப்பிடியிருக்கும் வரைக்கும் தமிழர்களின் உரிமைகள் மறுதலிக்கப்படுவதை தடுக்க முடியாது. “இதற்காகவே அதிகாரப்பகிர்வைக் கோருகிறோம். தமிழுக்கு சமஷ்டி அதிகாரத்தை வேண்டுகிறோம்.” இவ்வாறு நியாயங்களை எடுத்து விளக்கி, சர்வதேசத்தின் ஆதரவைப் பெறும் யுக்தியே இந்த சனல்-4.
நிலைமையின் விபரீதத்தை நன்கு புரிந்துகொண்ட இலங்கை, பொறுப்புக்கூறலை நிராகரித்துள்ளதுடன் வெளித்தலையீடுகளுக்கு வழமையான பாணியில் பதிலளித்துமுள்ளது.
இந்தக் காணொளியில் தென்னிலங்கைக்கும் ஒரு விவாதமிருக்கிறது. இந்த விவாதம் தென்னிலங்கையை மீண்டும் உசுப்பேற்றி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்சியைத் தக்கவைக்கவும் உதவலாம். முள்ளிவாய்க்கால் தோல்வியை ஈஸ்டர் தாக்குதலில் சந்தைப்படுத்துவதாக பேசினாலே போதும். இத்தாக்குதல் சூத்திரதாரிகளைக் கூட இந்தப் பிரசாரம் பாதுகாத்துவிடும். அந்தளவில் விரிசல்கள் இழையோடி உள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட இதன் சாயலில் அரசியல் செய்யும் கட்சிகள் தயாராவதும் இவ்வாறான பிரசாரங்களுக்குத்தான்.
இங்கே, இலங்கையைப் பொறிக்குள் மாட்டிவிடல் என்பது இரண்டு வகையில் பொருட்படுகிறது. யுத்தத்தை முடித்த பெருமைக்கு உரிமை கோரும் ராஜபக்ஷக்களை மாட்டிவிடுவது மற்றது தமிழர்களின் அதிகாரப்பகிர்வை மறுதலிக்கும் இலங்கை அரசாங்கத்தை இறுக்கிவிடுவது. இவையிரண்டிலும்தான், தமிழர்களின் அபிலாஷைகள் துளிர்க்கப்போகின்றன. இப்போது இடம்பெறும் காணி அபகரிப்பு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த அடையாளத் திணிப்பு,13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் காட்டும் தயக்கம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் என்பதெல்லாம், சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்த அல்லது அதிகாரப்பகிர்வு கோருவோரை அடிபணிய வைக்கவே!
மேலும், ஆட்சியாளர்களின் அதிகாரச் சிறகுகளுக்குள் அடைக்கலம் தேடுமளவுக்கு நீதித் துறையின் நிலைமைகளும் மாறியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான நிதியை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தும் நடக்கவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலையாகியவருக்கு இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. இந்த லட்சணங்களாலேயே சர்வதேச விசாரணைகளின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. உள்ளூர்ப் பொறிமுறை மற்றும் உள்ளக விசாரணைகள் எனக் கூறி சர்வதேசத்தில் காலங்கடத்திய இலங்கைக்கு இனிமேல் சொல்வதற்கு எதுவுமே இல்லாமல் போகலாம், சர்வதேச விசாரணையைத் தவிர.