( ஐ. ஏ. காதிர் கான் )
தேவஹூவ – புலனவெவ கிராமத்தைச் சேர்ந்த திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா, இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக, உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், (2024.05.06) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்குத் தெரிவானார்.
இவர் அங்கு ஆங்கில மொழி மூலம் வாயிலாக, முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பப் பிரிவில் “விஞ்ஞானமாணி” (BSE IN MIT) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், ஆங்கில மொழி ஊடாக சிறப்புச் சித்தி பெற்று “சிறப்புச் சட்டமாணி” என்ற பட்டத்தையும் [LLB(Hons)] சூட்டிக்கொண்டார்.
சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும், சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்துள்ள பாத்திமா நிஸ்ரா, தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாகத் தேர்வாகி, தனது கிராமத்திற்கும் தனது பெற்றோருக்கும் பேரும் புகழும் சேர்த்துள்ளார். அத்துடன், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் இதற்கான ஆரம்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டதையும் இவர், நன்றியுடனும் பெருமையுடனும் நினைவு கூர்ந்துள்ளார்.
இளம் வயதிலேயே சட்டத்தரணியாக புகழ் நாமம் சூட்டிக்கொண்ட இவர், தேவஹூவவைச் சேர்ந்த நிஸ்வர்தீன் – நிஸ்பா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியுமாவார்.
திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ராவின் மூத்த சகோதரிகளான திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்கா, திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்திகா ஆகியோர், தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகளாகப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.