புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில் 11.05.2024 நடைபெற்ற மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
1924 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவ பௌத்த மண்டபத்திற்கு 1925 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தக் கட்டிடம் 1929 ஜூன் 24 ஆம் திகதி மொரட்டுவ பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி இதனைத் திறந்து வைத்தார்.
மொரட்டு மகா வித்தியாலயத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.
நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவ பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் மொரட்டுவ பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவ பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரச்செடியை நடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
மொரட்டுவ பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கி வைத்தார்.
மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தனர்.
அதன்பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மொரட்டுவ மகா வித்தியாலயத்தின் டபிள்யூ. ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டு பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.