பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறித்த சட்டமூலங்களை வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம், ஆண் பெண் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை ஸ்தாபித்தல் மற்றும் பெண்கள் உரிமைகள் மீறப்படுதல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான “உலகளாவிய வன்கொடுமை எதிர்ப்பு சைகைகள்” 3 கை முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு 10.05.2024 கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் DP Education ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.