யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ ஓய்வூதிய கொடுப்பனவோ வழங்கப்படாததினால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்வாறான சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிறுத்தப்படும் கொடுப்பனவை மேலும் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.