சுஐப் எம்.காசிம்-
சமூகத்தின் பொது எதிரிகளை அடையாளங்கண்டு, அவர்களது ஆதிக்கப்போக்குகளை அர்த்தமிழக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய உரையை 1996இல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் நிகழ்த்தியமை நினைவுகூரத்தக்கது. வெறுமனே அஷ்ரஃபின் ஆளுமைகளை நினைவுகூர்வதுடன் நின்றுவிடும் தினமாக செப்டம்பர் 16 பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் அவரது இழப்பிலிருந்து எழுப்பவேண்டிய கடப்பாடுகளில் முஸ்லிம் தலைமைகள் கவனம் செலுத்தவில்லை. மேலைத்தேயத்தின் இஸ்லாமிய விரோதப் போக்குகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் களங்களை ஆயுதமேந்தாது தோற்கடிப்பது பற்றித்தான் அஷ்ரஃப் சிந்தித்தார், செயற்பட்டார். ‘சிறுபான்மைச் சமூகங்களுக்கானது’ எனச் சாயம் பூசப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு ஆயுதப் போராட்டத்திலும் அவருக்கு அக்கறையிருந்ததில்லை. ஜனநாயக வழியில் எதிரிகளைச் சிந்திக்க வைப்பது அல்லது வழிப்படுத்துவது, இவையிரண்டுமே அஷ்ரஃபின் அரசியல் இலக்குகள்.
ஈஸ்டர் தாக்குதலின் ஈனச்செயலுக்கு ஒரு சில முஸ்லிம் இழிவாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஊர்ஜிதமான இன்றைய சூழலில், அஷ்ரஃபின் அன்றைய அறிவுரைகளை ஊடகவியலாளர்கள் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
இன்று போன்று அன்று ஊடகவியல் துறையில் நவீனங்கள் இருந்ததில்லை. அரசியல்வாதியின் அந்தரங்கப் பதிவுகளிலிருந்து ஆதராம் தேடி எழுதும் கீழ்த்தரமும் இருக்கவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு எடுப்பதற்கு இரண்டு ரூபா நாணயக்குற்றிகளை கையில் வைத்து, கியூ வரிசையில் காத்திருந்த கதைகள் ஏராளம். இப்போது, கையடக்கத் தொலைபேசியுள்ளவர்கள் அனைவருமே ஊடகவியலாளராம். இதனால், இவ்வூடகவியலாளர் சிலரை விலைக்கு வாங்கிடலாம் என்ற மாயையிலும் பிரமையிலும் சில பணவூக்கிகள் ‘கள்ளுண்ட வண்டுகள் போல்’ முட்டி மோதுகின்றனர்.
எனவே, முஸ்லிம் ஊடகவியலாளனின் மூளையும் கரங்களும் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதை, அஷ்ரஃப் அன்று சொன்னதை, அவரது நினைவுப் பெருவெளியில் மிதக்க விடுகிறேன்.