நான்கு கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.
நிதி அமைச்சில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்குதல் மற்றும் அதனூடாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விரைவில் அறிக்கையொன்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாகன இறக்குமதி துறையில் தேர்ச்சி பெற்றவர்களினால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை ஊடாக வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து வாகனங்களையும் ஒரே நேரத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாது எனவும், பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது நடைமுறை சாத்தியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பயன்படுத்திய வாகனங்கள், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் என்ற அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.