போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
கோவிட் காலத்திலுள் மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளை விட இலங்கை முன்னிலை வகித்தது. அந்த வகையில் இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும். எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது