சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்ட சுயாதீன ஊதியக்குழு, பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை இறுதி செய்துள்ளது.
இந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முன்மொழியப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு, சர்ச்சை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Kumaraswamy) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய வங்கி தனது ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மார்ச் மாதம் 70 வீதம் வரை அதிகரித்திருந்தது, இது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் உச்ச நிதி நிறுவனமான மத்திய வங்கி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் செயற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.