நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் 04.05.2024 நடைபெற்ற மகாவலி குடியிருப்பாளர்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் கட்டியெழுப்பப்படும் பொருளாதாரத்தின் பலன்களை ஒரு பகுதியினர் மாத்திரம் அனுபவிக்காமல் ஏனைய தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே குறைந்த வருமானம் பெரும் மக்களுக்காக நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த காணி உறுதிகளுடன் அரசாங்கம் செயற்படுத்தும் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொண்டு பொருளாதாரத்தைப் பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, பொலன்னறுவையை நாட்டின் பிரதான ஏற்றுமதி மாவட்டமாக மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அனைவராலும் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தை, பொறுப்பேற்று குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தன்னால் முடிந்ததென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை நிர்மாணிக்க ஒன்றுபடுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இலங்கை மகாவலி அதிகார சபையினால் 204,002 நிரந்தர காணி உறுதிகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அனைத்து வலயங்களிலும் நிரந்தர காணி உறுதிகளைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன்படி அடையாள ரீதியாக 1340 காணி உறுதிகள் பொலன்னறுவை மாவட்டத்தின் பீ,சீ வலயங்கள், மெதிரிகிரிய, மொரகாகந்த உள்ளிட்ட மகாவலி வலய குடியிருக்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்போது 30 காணி உறுதிகள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
“இந்த அரங்கில் இருக்கும் அனைவரும் அனுமதி பத்திரங்களுடன் மாத்திரமே வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வௌியேறும் போது காணி உரிமையாளர்களாக செல்வீர்கள். உங்கள் காணிக்கு நிரந்தர உரித்து கிடைக்கும். நமது சமூகத்தில் காணி உரிமை கௌரவமாக பார்க்கப்படுகிறது. காணியின் பெறுமதி எமக்கான அந்தஸ்தாகவும் மாறும்.
இந்நாட்டில் பெருமளவானர்களுக்கு அவர்கள் பரம்பரையாக வசித்த காணிக்கு சட்டபூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. உறுமய திட்டத்தின் கீழ் அந்த காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படும். அதன் பின்னர் நீங்கள் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைக்கும் நிரந்தர காணி உரிமையை இரத்துச் செய்யவும் அதிகாரம் இல்லை.
நாம் அனைவரும் கடந்த மூன்று வருடங்களில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தோம். நாட்டின் பொருளாதாரத்தை போலவே நமது பொருளாதாரமும் சரிவடைந்தது. கைகளில் பணம் இருக்கவில்லை.அனைவரும் கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. தனியார் துறையிலும் பல நிறுவனங்கள் சம்பள அதிகரிப்புச் செய்தன. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வறிய மக்கள் முன்னேற்றங்களை நோக்கிச் சென்றனர். அதற்கான நாம் அஸ்வெசும வேலைத்திட்டத்தை செயற்படுத்தினோம். அதற்காக உலக வங்கியின் உதவி கிடைத்ததோடு, சமூர்த்தியின் நன்மைகளை மூன்று மடங்காக அதிகரித்தோம். பயனாளிகள் எண்ணிக்கையும் 18 முதல் 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் 10 கிலோ அரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இத்தோடு நாட்டில் வளர்ச்சி காணும் பொருளாதாரத்தின் நலன்களை ஒரு தரப்பினர் மாத்திரதே அனுபவித்தனர். அது ஏனைய தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். அந்த நோக்கத்திலேயே தற்போது அரசாங்கம் அனைவருக்கும் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானது. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. நாம் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறோம். விவசாயத்திற்காக மாத்திரமின்றி, வீட்டு உரிமைகளையும் வழங்கியிருக்கிறோம். மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கும் வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனாலேயே இந்த திட்டத்தை உலகின் புரட்சிகர திட்டமென கூறுகிறோம். இத்திட்டம் நாட்டு மக்களுக்கான விடுதலையாகும்.
காணி உறுதியை துரிதமாக தயாரிப்பது குறித்து அமைச்சரவையிலும் ஆலோசித்தோம். பிரதமர் இந்த பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். அது தொடர்பில் தேடியறிந்து பணிகளை முன்னெடுக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இந்த வேலைத்திட்டம் இரு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது. காணி ஆணையாளர் அலுவலகம், மகாவலி அமைச்சு, அளவையியல் திணைக்களம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த காணிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அராச்ஙகத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொள்வது உங்களது பொறுப்பாகும். நாட்டின் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை அரசாங்கம் முதன்மைத் திட்டமாக கருதி செயற்படுத்தும் நிலையில் அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கான ஜப்பானின் வௌிவிகார அமைச்சர் இன்று நாட்டுக்கு வரவுள்ளார். அதேபோல் அந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தேடியறிந்து அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்குள் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் உலக வங்கியின் பிரதிநிதிகளும் ஜூன் மாதத்தில் இலங்கை வரவுள்ளனர். அதற்கான திட்டங்களை சமர்பிக்க வேண்டியிருப்பதால் இதனை சட்டபூர்வமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். அதன்படி நாட்டை முன்னேற்றிச் செல்ல நாம் முயற்சிக்க வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பொலன்னறுவையை நாட்டின் பிரதான ஏற்றுமதி மாவட்டமாக மாற்றியமைக்க முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் தற்போது செயற்படுத்தியுள்ளோம். 76 வருடங்களாக என்ன செய்திருக்கிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். நீர்பாசன் திட்டங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை ஏற்படுத்தி விவசாயிகளை உருவாக்கி நாட்டை அரிசியில் தன்நிறைவடையச் செய்திருக்கிறோம்.
இருப்பினும் இந்த பகுதிகளை வந்து சேராமல் இருக்கும் அபிவிருத்திகளை ஏற்படுத்த நான் பொறுப்பேற்கிறேன். அதற்காக ஒன்றுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
அரசாங்கத்தை பிளவுபடுத்த வேண்டுமென நான் ஒரு நாளும் சொல்லப் போவதில்லை. இன்று இருப்பது புதுமையான ஆட்சியாகும். வேண்டாமென அனைவரும் வெறுத்து ஒதுக்கிய அரசாங்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். எவரும் இதனை ஏற்க முன்வரவில்லை. அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். தொடர்ந்தும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி எதிர்கால இளைஞர் சமூகத்திற்கான சிறந்த எதிர்காலம் கட்டமைக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.