முஸ்லிம் அரசியலின்
பல்துறை வகிபாகம்
ஹாபிஸ் நஸீர் அஹமட்
முஸ்லிம் அரசியலில் பல்துறை வகிபாகங்கள் கொண்டவர் ஹாபிஸ் ஷெய்னுலாப்டீன் நஸீர்அஹமட். புனித அல்குர்ஆனை ஏழாவது வயதில் மனனம் செய்து ஹாபிஸ் என்ற புகழுடன் ,முஸ்லிம் சமூகத்தில் தனி அந்தஸ்துடன் நோக்கப்படுபவர் இவர்.
ஆரம்ப கல்வியை ஏறாவூரில் பயின்று பின்னர் ரோயல் கல்லூரியில் கற்றதால்,சகல சமூகங்களதும் சகவாசம் இவருக்கு கிடைத்தது.
சவூதி அரேபியாவின் கிங்பஹாட் பெற்றோலிய மற்றும் கனிய வள பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளவர் இவர். சவூதிஅரேபியாவின் பிரபல கம்பனியில் ஐந்து வருடங்கள் பணியாற்றி, நாடு திரும்பியிருந்தார்.
இரண்டாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையுடன் இவரது அரசியல் வரலாறு நீள்கிறது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உயர்ந்து தற்போது
ஆளுநராக பதவி உயர்ந்துள்ளார்.
முஸ்லிம் தனித்துவ அரசியலை ஸ்திரப்படுத்த நஸீர் அஹமட் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள், பன்முக ஆளுமைகளின் பரிணாமமாகப் பார்க்கப்படுகின்றன. ஜனநாயக ஐக்கிய முன்னணி (DUA) மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (MNA) ஆகிய கட்சிகளின் ஸ்தாபகத் தலைவரான இவர், இக்கட்சிகளூடா க முஸ்லிம்களுக்கும் சம அந்தஸ்து, அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்கு ஜனநாயக வழியில் செயற்படுகிறார். தவறிப்போன விலாசங்களைத் திரட்டி, தேசிய இனத்துக்கான ஆதாரங்களை முன்வைப்பதற்கான வழிகளில் பயணிக்கின்றன இவரது புறப்பாடுகள். மேல்மாகாண முஸ்லிம்களின் தேவைகளை முன்னிலைப்படுத்த இவரது கட்சிகளில் ஒன்றான ஜனநாயக ஐக்கிய முன்னணி, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்தது. இச்சபையின் முன்னாள் உறுப்பினரான ஏ,ஜே, முஸம்மில் இக்கட்சியூடாக காலூன்றியதால், இன்று ஆளுநராக உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. இதையடுத்து கிழக்கு மாகாண அமைச்சராகி, முதலமைச்சராகி பிரதேசத்துக்கு காத்திரமான பணிகளாற்றியதால், மக்கள் தலைவனாவதற்கான அத்திவாரம் உறுதியாக இடப்பட்டது.
இவ்வாறான இவரது கடுமையான உழைப்புக்களும் சமூகத்தின் மீதான கவனங்களும் தேசிய அரசியலுக்குள் நஸீர்அஹமடை அழைத்து வந்தது. மக்கள் நலனுக்காக தன்னிடமிருந்த அதிகாரங்களூடாக அயராது உழைத்தார். ஆட்சி, அதிகாரங்கள் ஆண்டவனின் நாட்டத்தில் உள்ளதென்பதில் அசையாத நம்பிக்கை இவருக்குண்டு. ஏதொவொரு அவனுடைய நாட்டத்தில், பதவி பறிபோன போதுங்கூட ஓயாது உழைத்தார். பகட்டு அரசியலில் நிலைக்க முயலும் சக்திகளைப் பலப்படுத்தாமலிருக்க, தாம் நிலைப்பட வேண்டும் என்ற தௌிவும் துணிவும் நஸீர் அஹமடிடம் இருந்தது. இதுவே அவரது உயர்ச்சிக்கு ஊன்றுகோலாக உள்ளது.
இதனால், நஸீர் அஹமட் ஆளுநராக நியமிக்கப்படுகிறார். முஸ்லிம் அரசியலில் பல தடயங்களைப் பதித்துள்ள தனித்துவம் இவர். இதனால்தான், சமூகத்தின் பன்முக ஆளுமையாக நஸீர் அஹமடை முஸ்லிம் சமூகம் நோக்குகிறது.