நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிராக இருந்த கறுவாச் செய்கையை பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் 28.04.2024 இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“சிலோன் டீ” என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம், தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில் பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் செஃப் தோமஸ் குக்லர் ஆகியோர் டில்மா கறுவா தயாரிப்புகளை அடையாள ரீதியில் வெளியிட்டனர்.
“சிலோன் டீ” என்ற பெயரை டில்மா புத்துயிர் அளித்தது போல் “சிலோன் சினமன்” என்ற பெயரை முன்வைத்ததற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.