சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வருடாந்த மாநாடு ஏப்ரல் 26/27 திகதிகளில் கொழும்பில் நடைப்பெறுவதோடு, மாநாட்டில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையை நிகழ்த்தினார்.
1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகம் 17,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கும் இதன் பங்களிப்பு கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1994 முதல் கொழும்பு சர்வதேச ரோட்டரி கழகத்தின் மாவட்ட 3220 மேற்கு பிரிவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.