மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இருநாட்டு தலைவர்களும் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து “உமா தியா ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளித்ததுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப முறையின் ஊடாக மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்கி பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
அதனையடுத்து இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் ஆதரவின்றி இலங்கையால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு சென்றிருக்க முடியாது. அதற்காக ஈரான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
உலகின் தென் துருவ நாடுகள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக தென்துருவ நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதனையடுத்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் மட்டுமல்ல, ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான அடையாளமாகும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி, இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொழில் நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவத் தயாரெனவும் தெரிவித்தார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி மற்றும் அவரது பாரியார் ஜெமீலே சதாத் அலமோல்ஹுதா உள்ளிட்ட குழுவினர் இன்று (24) காலை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.
இதன்போது ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததோடு , 2008 ஏப்ரல் மாதத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதி நெஜாட்டின் இலங்கை விஜயத்திற்கு பின்னர், ஈரான் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
தனது வருகையை குறிக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி மத்தளை விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் குறிப்பேட்டிலும் பதிவிட்டார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் (UOMDP) என்பது இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். தென்கிழக்கு பகுதியின் உலர் வலயத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, சுற்றுச் சூழலுக்கும், நீர் மூலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உமா ஓயாவில் வருடாந்தம் சேரும் 145 (MCM) கனமீற்றர் நீருக்கு மேலதிகமான நீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும். அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.
இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப் பாதை), 15.2 கி.மீ நீளமான பிரதான சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், மின்சார கம்பிக் கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிர்மாணங்களும் உள்ளடங்கியுள்ளன.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்ததின் ஊடாக 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இத்திட்டத்திற்கு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இருப்பினும், அந்த சமயம் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. எனவே, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இத்திட்டம் 2010 மார்ச் 15 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2015 மார்ச் 15 ஆம் திகதி நிறைவு செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதான (Headrace tunnel) சுரங்கப்பாதையில் எதிர்பாராத விதமாக தண்ணீர் நுழைதமையால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சமூக பாதிப்புகள், நிதி சவால்கள் உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் நிர்மாணக் காலத்தில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்று நோய் பரவல் என்பன காரணமாக, திட்டத்தின் நிறைவு திகதி 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் குறைபாடுகள் மற்றும் உத்தரவாதக் காலமும் 2025 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
மின்சாரத்தை உற்பத்தி செய்த பின்னர், அந்த நீர், சுரங்கப்பாதை மூலம் கிரிந்தி ஓயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள அலிகோட்ட ஆர நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பி விடப்படுகிறது. அதன் பின்னர், அந்த நீர் உமா ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரையில் அமைந்துள்ள இத்திட்டத்தின் கீழ் நீர் கொள்ளளவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள ஹந்தபானாகல
நீர்த்தேக்கத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, மஹாரகம, தனமல்வில, பலஹருத போன்ற பிரதேசங்களுக்கும் நீர் வழங்குவதற்காக, உமா ஓயாவின் தென் கரையில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய குடா ஓயா நீர்த்தேக்கத்திற்கும் திருப்பி விடப்படவுள்ளது. 60 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட நீர்ப்பாசன கட்டமைப்பும் கட்டப்பட்டு வருகிறது. இந்த நீர்ப்பாசன முறைகள் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் தற்போதுள்ள 1500 ஹெக்டெயார் நிலப்பரப்பு மற்றும் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 4500 ஹெக்டெயார் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் உமாஓயா கீழ் நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டமானது கிரிந்தி ஓயா பள்ளத்தாக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த நீர்ப் பற்றாக்குறையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெறப்படும் நீரின் மூலம் அதிகபட்ச பயன்களைப் பெற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பண்டாரவளை மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீரை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தீர்வுகளை வழங்கியுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்ற ஈரான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் கருதுகிறேன்.
இந்தத் திட்டம் எனது பதவிக் காலத்திற்கு முன்பிருந்த தலைவர்களால் தொடங்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும். அத்துடன் உலர் வலய பிரதேசத்திற்கு நீர் வழங்கும் இத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அக்கறை காட்டினார். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் எமது இரு நாடுகளுக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இந்த சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
மேலும், இந்த உமா ஓயா திட்டம் நமது இரு நாடுகளின் இரண்டு பழைமையான நீர்ப்பாசன மரபுகளின் கலவையாகும். ஈரானில் பெர்சியா மற்றும் இலங்கையில் அனுராதபுரத்தின் நீர்ப்பாசன பாரம்பரியம் இங்கே உள்ளது. ஈரானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைக்காமல் போயிருந்தால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்பதைக் கூற வேண்டும்.
ஈரானின் தொழில்நுட்ப வல்லமை அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது. ஈரான் தனக்கே உரிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேணும் நாடு என்பதையும் கூற வேண்டும். எனவே, இரு நாடுகளின் பொதுவான அம்சங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் உலகளாவிய தெற்கு நாடுகளில் அடங்குகிறோம். உலகளாவிய தெற்கு நாடுகள் தங்கள் அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக, ஈரான் எமது நாட்டின் உலர் வலய பிரதேச மக்களுக்கு நீர் வழங்குவதற்கு பங்களித்துள்ளது. இது மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உலர் வலய பகுதிக்கு நீர் வழங்குவது என்பது அந்தப் பகுதி மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதாகும். கிருவாபத்துவவிற்கு அப்பால், மாகம்பத்துவவில் உள்ள பகுதியில் வறட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்படியானால், இன்று நாம் செய்திருப்பது உடவளையில் கிடைக்கும் பல்நோக்கு முறைமையை கிரிந்திஓயாவுக்குக் கொண்டுவருவது தான்.
அந்த நீர்ப்பாசன முறைமையுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய முதலீட்டு வலயத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம். இதன் மூலம் ஹம்பாந்தோட்டை மாவட்டம் புதிய பொருளாதார முன்னேற்றத்தை பெறும்.
இந்தப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக சிறு மற்றும் பெரும்போகங்களில் 6000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படும். உடவளவ பிரதேசம் இலங்கையில் அதிகளவு நெல்லை உற்பத்தி செய்கிறது. தற்போது ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் அதே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
அதன் மூலம் தென் மாகாணத்திலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். மேலும், இது வலுசக்தித் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.
மேலும், இந்த திட்டத்தின் ஊடாக 120 மெகாவொர்ட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். உலகின் தெற்கில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் ஈரானும் இலங்கையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்படி, ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி:
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதை பெருமையாகவும் கருதுகிறேன்.
இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் என்றே கூற வேண்டும். இந்த அற்புதமான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கிறோம். ஆனால், நமது இரு நாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு மிக முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன்.
மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்று கூற வேண்டும்.
கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே, ஈரான் இஸ்லாமிய குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக கடந்த 45 வருடங்களில் ஈரான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் இலங்கையுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.
இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.