ஐ. ஏ. காதிர் கான் –
Apax Campus இன் பட்டமளிப்பு விழா, கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில், (29) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், நிறுவனத்தின் ஸ்தாபகர் மீரா சாஹிப் ஜெஸ்லின் ரிசாட் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில், மாலைதீவு, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உயர் ஸ்தானிகர்கள், உள்நாட்டு அமைச்சர்கள், பேராசிரியர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள், என பல்வேறு உயர்மட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வின் போது, கல்வி, முகாமைத்துவம், கலை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் பட்டமளித்துக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
Apax Campus நிறுவனம், 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் கைச்சாத்திட்டு, பல்வேறு கற்கை நெறிகளை, தொலை தூர கற்கை நெறி மூலம் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.
அந்த வகையில், IIC University of Technology, Azteca University மற்றும் Gideon Robert University போன்ற பல்வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து, சான்றிதழ் கற்கை நெறி முதல் கலாநிதி கற்கை நெறி வரையிலான பல்வேறு துறை சார் கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது.
அத்துடன், அர்ப்பணிப்பு உள்ளதும், தகைமையும் அனுபவமும் உள்ள சிறந்ததொரு விரிவுரையாளர் குழுமம் ஒன்றினைக் கொண்டுள்ளதுடன், சிறப்பான முகாமைத்துவக் கட்டமைப்பினையும் இந்நிறுவனம் கொண்டிருப்பதனால், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஈர்த்துள்ளது.
Apax Campus நிறுவனத்தின் கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள் நியாயமானதும், இலகு தவணை அடிப்படையிலான கட்டண முறைமையையும் கொண்டுள்ளமையினால், அதிகமான மாணவர்கள் இணைந்து பல்வேறு பாட நெறிகளைப் பயில்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட இக்கற்கை நெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுள்ளமையானது, இங்கு குறிப்பிட்டுக்காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
மேலும், இலங்கையில் அரச தொழில் துறைகளில் சேவையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் Apax Campus ஊடாக பட்டப்படிப்புகளைப் பூர்த்தி செய்து, அத்தகைமைகள் ஊடாக பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளமையும் முக்கிய அம்சமாகும். Apax Campus கல்வி நிறுவனம், சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பல்வேறு துறை சார்ந்த கற்கை நெறிகளை நடத்துவதினால், இன்றைய தொழிற் சந்தைக்குத் தேவையான திறன்களையுடைய தொழிலாளர்களை உருவாக்கியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
Apax Campus இன் நவீன கற்பித்தல் ஒழுங்கு முறைகள், துறைசார் கற்கை நெறிகளின் அறிமுகம், நெகிழ்வான தவணைக் கட்டண முறை, அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் என்பனவற்றால், சர்வதேச ரீதியாகவும் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்துள்ளது.
Apax Campus இன் பிராந்திய நிறுவனங்கள், விரைவில் வெளிநாடுகள் பலவற்றில் ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காலத்துக்குத் தேவையான தொழிற் திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதற்கான பல்வேறு பாட நெறிகளையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிறுவனம், கல்வித் துறையுடன் மட்டும் நின்று விடாது, பல்வேறு சமூக அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.