கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் 23.04.2024 நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமைப்பாகும்.
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் ஆரம்ப அங்கத்தவர்களில் ஒருவரும், சிரேஷ்ட கலாநிதியுமான கே.ஆரியசிங்கவிற்கு சிரேஷ்ட வளவாளருக்கான விருதும் ஏனைய வளவாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திர பண்டாரவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்க நிறைவேற்றுக் குழு உறுபினர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டார்.
அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அதனை கல்வி நிபுணர்களுக்கு மாத்திரமானதாக மட்டுப்படுத்தாமல், பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதார துறையினர், அகில இலங்கை வளவாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
1981 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வி வௌ்ளை அறிக்கை கொண்டுவரப்பட்ட வேளையில், பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யுமாறு பலரும் கூறியபோதும், தான் அதனை செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே கல்வி அமைச்சின் பொறுப்பாகும். அதற்கு மேலதிகமான பிரத்தியேக வகுப்பு முறைமைகள் நாட்டுக்குள் உருவாகி வெகுவாக வளர்ந்துள்ளன. அன்று கல்வித் துறையில் காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாற்று வழியாக பிரத்தியேக வகுப்பு முறையை தெரிவு செய்தனர். இன்று பாடசாலைக் கல்வியும் பிரத்தியேக வகுப்பு முறையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு முன்னேற்றம் கண்டுள்ளன.
குறிப்பாக கடந்த கொரோனா காலத்தில் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் கல்வியை வழங்கியது பற்றி இங்கு குறிப்பிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், உயர்தர மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வியை வழங்குவதற்கான டெப்களை வழங்க கல்வி அமைச்சிடம் நாம் முன்மொழிந்தோம். அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டன. ஆனால், எதிர்ப்புகள் எழுந்ததால், கல்வி அமைச்சு அதனை கைவிட்டது. அன்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், ஒன்லைன் கல்வி அங்கிருந்து ஆரம்பமாகியிருக்கும். ஆனால் இன்று அந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளமைக்காக அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தினை (All Island Professional Lecturers’ Association) பாராட்டுகின்றேன்.
இன்று உலகின் பல நாடுகளில் பாடசாலைக் கல்வியும் பிரத்தியேக வகுப்பு முறையும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. கடந்த பொருளாதாரச் சரிவின்போது பல்வேறு அனுபவங்களைப் பெற்றோம். நாம் அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகிறோம். புதிய பொருளாதாரத்துடன் நாம் முன்னேற வேண்டும். அதன்போது ஏற்றுமதி சார்ந்த மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரம் எமக்குத் தேவை. மேலும், வறுமையை குறைக்கும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.
இவை அனைத்துடனும் நாட்டுக்கு ஏற்ற கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலைக் கல்விக்கும், பிரத்தியேக வகுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன, அதேபோன்று ஒன்லைன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை கல்வியில் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன்று தொழில்நுட்பத்தால் கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த மாற்றத்துடன் நாம் முன்னேற வேண்டும்
கோல்புரூக் காலத்தில் பிரித்தானிய முறையில் பாடசாலைகளைத் ஆரம்பித்திருந்தமை பிரித்தானிய ஆட்சியின் நன்மைகளில் ஒன்றாகும். அத்துடன் அரச, மிஷனரி மற்றும் பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவுக்கு முன்னரே இலங்கையில் மேற்கத்திய கல்வி முறை ஆரம்பமானது. இந்த கல்வி முறை இலங்கையிலிருந்து ஆசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைக் கூற வேண்டும்.
அதேபோன்று, ஏனைய நாடுகளுக்கு முன் இலவசக் கல்வியை நாம் தொடங்கினோம். எனவே இந்த புதிய தொழில்நுட்பத்தை கல்வியில் எவ்வாறு சேர்ப்பது என்பதை அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப, நவீன கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்கு அல்ல, 2050 ஆம் ஆண்டுக்கான கல்வி முறையாக அது இருக்க வேண்டும்.
இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை கல்வி நிபுணர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அவர்களைப் போன்று, பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களையும் இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
அந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, நவீன கல்வி முறைக்கு செல்ல வேண்டும். அங்கு முன்வைக்கப்படும் எந்த ஆலோசனையும் நிராகரிக்கப்படக்கூடாது. மேலும் கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது. நாம் எவ்வளவு விளையாடினாலும் கோல் அடிக்க முடியாது.
இறுதியில் நாடுதான் தோல்வி அடையும். எனவே, இதிலிருந்து விடுபட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்காலக் கல்வி முறையை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதன்படி, 2050 ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டிற்கு சிறந்த கல்வி முறை எது என்பதை இந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கலந்துரையாடப்பட வேண்டும். அதன் பிறகும் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களோடு நாம் தொடர்ந்து பரிமாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேன் ஜேக்கப், பொருளாளர் ஆசிரி சம்பத், தேசிய அமைப்பாளர் ஜனக கிரிஷாந்த உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், இலங்கையின் தொழில்சார் வளவாளர்கள் உட்பட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.