கொழும்பு :பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
உலக யுத்தங்களின் போதும் 30 வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலும் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்தினால் வருடாந்தம் பொப்பி மலர் தினம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
பொப்பி மலர் விற்பனையினால் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்துடன் இணைந்து செயற்படும் முப்படையிலிருந்து ஓய்பெற்றோர் அங்கத்துவம் வகிக்கும் 44 சங்கங்களின் 50 ஆயிரம் உறுப்பினர்களின் நலன்புரிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் அஜித் சியம்லாபிட்டிய, பொருளாளர் மேஜர் ஜீ.கே.சீ. சாந்திலால் கங்கானம்கே, பொப்பி குழுவின் தலைவர் பிரிகேடியர் ஹேமந்த லியனகே, குழு உறுப்பினர்களான மேஜர் பீ.எச்.வில்டஸ் டி சில்வா, கெப்டன்.டீ.எம்.எச். மடுல்கல்ல, கே.எச்.என்.சந்தி ஹெட்டியராச்சி, ஐ.கே.ஏ.ரோஹனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதனையடுத்து தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.