கொழுப்பு, ஏப்ரல் 21, 2024 – அமெரிக்க கடற்படை, அமெரிக்க மெரைன் கோர்ஸ், மற்றும் இலங்கை கடற்படை என்பன ஒன்றாக இணைந்து, ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை Cooperation Afloat Readiness and Training (CARAT) Sri Lanka 2024 எனும் பயிற்சியினை திருகோணமலையில் மேற்கொள்ளவிருக்கின்றன. இலங்கை கடற்படையின் மெரைன் எதிரிணைகளுடன் இணைந்து அனைத்து வகையான கடற்படை திறன்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும் CARAT Sri Lanka பயிற்சியானது, கடற்படைச் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் விசேட நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க மெரைன் கோர்ஸ் இன் படைப் பிரிவான அமெரிக்க கப்பற்படை பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புக் குழுவின் (FAST) நிபுணத்துவத்தை வௌிப்படுத்துவதாக அமைந்திருக்கும். சமாதானப் பேச்சுவார்த்தைகள், முரண்பாடுகளை முகாமை செய்தல் மற்றும் அவற்றைத் தீர்த்தல் ஆகிய விடயங்களில் பெண்கள் வகிக்கும் மிகமுக்கிய பாத்திரங்களை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கையும் CARAT Sri Lanka பயிற்சி உள்ளடக்கியுள்ளது. ஐந்தாவது முறையாக நடைபெறும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தமது பங்காளர்களுடன் கிட்டத்தட்ட 70 அமெரிக்க அலுவலர்கள் பணிபுரியும் இந்த CARAT Sri Lanka இருதரப்பு கடல்சார் பயிற்சியானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பராமரிப்பதற்காக அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள வலுவான பங்காண்மை மற்றும் பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இப்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், “2017ஆம் ஆண்டில் இலங்கை CARAT பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் நடைபெறும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு இராணுவ ஈடுபாடாக அது வளர்ந்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையினைப் பேணுவதில் நாம் கொண்டுள்ள பொதுவான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. பங்காண்மைகளை போஷித்தல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கடல்சார் திறன்களை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு அமெரிக்கா வழங்கும் முக்கியத்துவத்தினை இப்பயிற்சி எடுத்துக்காட்டுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் இலங்கை கடற்படைகள் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயற்படுவதை இது சாத்தியமாக்குகிறது.” எனத்தெரிவித்தார்.
“அமெரிக்க கடற்படை போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் நல்ல யுத்த உபகரணங்களைக் கொண்டுள்ள ஒரு கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நம்பிக்கை, அனுபவம் மற்றும் செயற்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை இலங்கை கடற்படை பெற்றுக்கொள்வதை இவ்வாறான பயிற்சிகளில் பங்கேற்பதானது சாத்தியமாக்குகிறது. கடற்பிராந்தியத்தில் சுதந்திரமாக கப்பற்பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்தல், விதிகளின் அடிப்படையிலமைந்த ஒரு ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் கடல்சார் களத்தில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்தல் போன்ற விடயங்களில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்காக பல்வேறுபட்ட கடற்படைகளுடன் ஒன்றிணைந்து இலங்கை கடற்படை செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் இவ்வனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” என இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கூறினார்.
நடைபெறவிருக்கும் CARAT பயிற்சி வௌிக்காட்டுகின்ற இரு நாட்டு மக்களுக்குமிடையிலான ஒத்துழைக்கும் மனப்பான்மையினைப் பாராட்டிய அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான அந்தனி நெல்சன், “எமது சொந்த தேசங்களைப் பாதுகாப்பதற்கும் எமது பரஸ்பர நலன்களுக்குப்பயனுடைய சர்வதேச தராதரங்களைப் பேணுவதற்குமான எமது கடற்படைகளின் திறனை மேம்படுத்துவதே CARAT பயிற்சியின் நோக்கமாகும். எனினும் இது எமது கடற்படைத் திறன்களைக் கூர்மைப்படுத்துவது தொடர்பான பயிற்சி மட்டுமல்ல; CARAT Sri Lanka 2024 பயிற்சியானது எமது பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாக விளங்குகிறது. எமது இலங்கை சகாக்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதன் மூலம் நீடித்த நட்புறவுகளையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு இது உதவுகிறது.” எனத்தெரிவித்தார்.
1995 இல் ஆரம்பிக்கப்பட்ட CARAT பயிற்சியானது அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ், புரூனை, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் திமோ-லெஸ்ட் ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பயிற்சிகளின் ஒரு தொடராகும். தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இப்பயிற்சித்தொடரானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இணைந்து செயற்படுதல், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் ஊடாக உறவுகளைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவிற்கும் மற்றும் அதன் பங்காளர்களாக விளங்கும் கடற்படைகளுக்குமிடையில் நிலவுகின்ற தொழிற்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.