கூட்டொருமைப்பாட்டின் முக்கியமான வெளிப்பாடாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து சவால்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சார்பாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய கொன்சூல் ஜெனரல் ஶ்ரீ சாய் முரளி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களுடன் இணைந்து இந்த நிவாரணப் பொருட்களை டிசம்பர் 07 ஆம் திகதி வழங்கிவைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய கிராமங்கள் (மன்னார் மாவட்டம்), துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2100 குடும்பங்கள் இந்த அத்தியாவசிய உதவிப்பொருட்களை பெற்றுக்கொண்டிருந்தன. இந்நிவாரணப் பொதியில் பாய்கள், கம்பளங்கள் உள்ளிட்டவை காணப்படுவதுடன் இவ்வாறான நெருக்கடி மிகுந்த காலத்தில் இக்குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை இந்த உதவித்திட்டம் வழங்குகின்றது.
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையினை வலியுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது நோக்கினை இந்த உதவி பிரதிபலிக்கின்றது. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய நேரத்தில் பயனுள்ள நிவாரணங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்து, தேவைப்படும் நேரங்களில் அயல் நாடுகளுக்கு ஆதரவாக துணை நிற்பதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது.


