மருந்துகளுக்கான விலை நிர்ணய குழுவுக்கு நீதிமன்றத் தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவால், விலைக் கட்டுப்பாடு தொடர்பில் நேரடி தீர்மானம் எதுவும் எடுக்க முடியாமல் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தனியான பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, இந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன் எதிர்வரும் சில தினங்களில் அந்த பொறிமுறைக்கான வர்த்தமானியை வெளியிடக்கூடியதாக இருக்கும். அதனூடாக அநேகமான மருந்துகளின் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பதற்கு தனியான குழுவொன்று இருக்கின்றது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் கீழே இந்தக் குழு செயற்படுகிறது. இந்தக் குழுவுக்கு அப்பால் மருந்துகளுக்கான விலையை நிர்ணயிப்பதற்கு தனியான பொறிமுறை தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால், கடந்த அரசாங்கங்களினால் அந்த பொறிமுறை தயாரிக்கப்படவில்லை.
இருந்தபோதும் ஓரளவு விலை நிர்ணயத்தை இந்தக்குழு மேற்கொண்டு வந்துள்ளது. இந்தக்குழுவின் செயற்பாடு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் மேற்கொள்ளப்பட்டது. ஒருவருடத்துக்கு மேல் இந்தக் குழுவுக்கு தடையுத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மருந்துகளுக்கான விலை நிர்ணயத்தில் நேரடியாக தலையிடுவதற்கு அரசாங்கத்தால் முடியாமல் இருக்கிறது. இது மிகவும் அரசாங்கத்துக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும்.
மருந்துகளின் கட்டுப்பாட்டு விலைத் தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தோம். ஆனால் அவை தோல்வியடைந்துள்ளன. இதற்கான பொறிமுறையை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். எனவே, இன்னும் சில தினங்களில் மருந்துகளுக்கான விலை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானியை வெளியிடக் கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் சாதாரண முறையினூடாக அநேகமான மருந்துகளுக்கான விலை கட்டுப்பாட்டை விதிக்கக் கூடியதாக இருக்குமென்று கருதுகிறோம். அதன்போது அநேகமான மருந்துகளின் விலை கட்டுப்பாட்டுக்கு வரும் என்பதுடன் மறுபுறம் டொலரின் பெறுமதி குறைவால் ஏற்படும் இலாபமும் சில மருந்துகளுக்கு இன்னும் வழங்கப்பட வில்லை. கடந்த காலங்களில் வேறுசில முறைகளினூடாக மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தோம். ஒருசில நிறுவனங்கள் அவர்களாகவே மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தார்கள். எனவே புதிய பொறிமுறையுடன் மேலும் மருந்துகளின் விலை குறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்