கொழும்பு:
- கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
- சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள் கொண்டு வருவதாகும்
ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் 04.07.2025 வெள்ளி பிற்பகல் நடைபெற்ற “சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
” சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார்.