கொழும்பு மாவட்ட வேட்பாளர் நௌஸர் பௌஸி
கொழும்பு மாவட்ட மக்களின் தேவைகளில் எதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அறிந்து, மூவின மக்களுக்கும் தேவையான சேவைகளை எனது அரசியலினூடாக முன்னெடுப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் (சிலிண்டர் சின்னம்) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் நௌஸர் பௌஸி தெரிவித்தார்.
கொழும்பு பிரதேசத்தில் நேற்று மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றிய வேட்பாளர் நௌஸர் பௌஸி, கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிறைய தேவைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இத்தேவைகளில் எதற்கு முதன்மைப்படுத்தி முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை இப்பிரதேசத்திலுள்ள முக்கியஸ்தர்கள் இனங்கண்டு எனது கவனத்திற்கு கொண்டுவருவார்களாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும்.
எல்லா பிரச்சினைகளுக்கும் தனியாக நின்று என்னால் நிவர்த்திக்க முடியாது. சிலபோது அரசியல் அதிகாரங்கள் தேவை. அப்படி அதிகாரங்களை மக்களாகிய நீங்கள் எமக்கு இந்தத் தேர்தலினூடாக பெற்றுத் தருவீர்களாயின் உங்கள் பிரச்சினைக்கான தீர்வை பதவிக்கு வருகின்ற அரசாங்கத்தினூடாக பெற்றுத் தர முடியுமென்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
பதவிக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை. உங்களின் பிரதிநிதியாக இருந்து, உங்கள் பிரச்சினைக்குரிய தீர்வை நான் பெற்றுத்தருவேன். எதிர்வரும் 14ஆம் திகதி நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எமக்கு வழங்குகின்ற அந்த ‘வாக்கென்ற’ அதிகாரத்தினூடாக உங்களுடைய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேனென்றும் வேட்பாளர் நௌஸர் பௌஸி தெரிவித்தார்.