இஸ்மதுல் றஹுமான்
வெளிநாட்டிலிருந்து நெத்தலி கருவாடு இறக்குமதி செய்வதனாலும் உப்பு விலை அதிகரிப்பினாலும் கருவாடு உற்பத்தி செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை வரவு செலவு திட்டத்தில் மீனவர்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர் என மீனவ மற்றும் கருவாடு சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு கடற்கரை தெரு- குடாப்பாடு ஒன்றினைந்த மீனவ சங்கத் தலைவர் ரொட்னி பிரனாந்து, சாந்த செபஸ்தியன் கருவாடு உற்பத்தியாளர் சங்க தலைவி சாந்தி ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது மலேசியா, தாய்வான் போன்ற நாடுகளிலிருந்து நெத்தலி கருவாடு இறக்குமதி செய்வதனாலும் உப்பின் விலை அதிகரித்துள்ளதனாலும் கருவாடு காய்த்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எமக்கு கருவாடு காய்த்தலுக்காக மீனவர்களிடமிருந்து அதிக விலைக்கு மீன்களை வாங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்த கருவாடு இறக்குமதியினால் விலை குறைந்துள்ளன.
தற்காலத்தில் கடற்கரை அண்டிய பகுதிகளில் நெத்தலி மீன்கள் பிடிபடுகின்றன. தூர சென்று மீன்களை பிடிப்பதாயின் 10 ஆயிரம் ரூபாவுக்கு எண்ணெய்க்கு செலவழிக்க வேண்டும். 50 ரூபாவிற்கு விற்பதற்கு எத்தனை கிலோ கொண்டுவர வேண்டும்?.
எனவே கருவாடு இறக்குமதி செய்வதை நிறுத்தி உப்பின் விலையை குறைத்து மீனவர்களை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவு செலவு திட்டம் தொடர்பாக இவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது இம் முறை பஜட்டில் மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், ஒய்ல், மீன்பிடி உபகரணங்களின் விலைகள் குறையும் என எதிர்பாரத்தோம். அது நடக்கவில்லை.
முன்பு மீன் வலைகளை வாங்கினால் சுமார் 10 ஆண்டுகள் வரை பாவிக்கமுடியும். ஆனால் தற்போதுள்ள வலைகள் 6 மாதங்கள் கூட பயன்படுத்த முடியாது.
எமது பிரச்சிணைகளை பேசுவதற்கு ஜனாதிபதி அவசரமாக நேரம் ஒதுக்கித் தரவேண்டும்.
எமது சங்கத்தின் கீழ் 1000 ம் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. கற்பிட்டி, பத்தலங்குண்டு பிரதேசத்திலும் எமது அங்கத்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
அங்கு அத்துமீறி வரும் இந்திய டோலர்கள் எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துகின்றனர். அங்கிருக்கும் கடற்படையினராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அத்துமீறலை முற்றாகத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.