2025 ஆம் ஆண்டுக்கு முன்பாக, இலங்கையில் நிதி மோசடி மற்றும் பயங்கரவாத
செயற்பாடுகளுக்கு நிதியளித்தலுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பு தொடர்பில்
அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்காக இலங்கையின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினால் விடுக்கப்பட்ட
அழைப்பிற்கு இணங்க, நிதிமோசடி தொடர்பான ஆசிய பசுபிக் அமைப்பின்
உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
நிதிமோசடி தொடர்பான ஆசிய-பசுபிக் குழுமத்தின் இணைத் தலைவரும், கனடாவின்
ஒட்டாவா, நிதித் துறை மற்றும் நிதிக் கொள்கைப் பிரிவின் பிரதி
அமைச்சருமான ஜூலியன் ப்ராசூ, நிறைவேற்றுச் செயலாளர் கார்டன் ஹூக்,
அந்நியோன்ய மதிப்பீட்டு பணிப்பாளர் டேவிட் ஷானன் உள்ளிட்ட உயர்மட்ட
குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
நிதிமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலுக்கு எதிரான (AML/CFT)
கட்டமைப்பைப் பற்றிய முக்கியமான புரிதலை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கும்
நோக்கிலேயே மேற்படி குழுவின் விஜயம் அமைந்திருந்தது.
நிதி நடவடிக்கைச் செயலணியின் (FATF) கீழுள்ள ஒரு பிராந்திய மேற்பார்வை
அமைப்பான, ஆசியா பசுபிக் குழு, நிதிமோசடி (ML), பயங்கரவாதத்திற்கு
நிதியளித்தல் (TF) மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அது
தொடர்பிலான வேலைத்திட்டங்களுக்கு (PFWMD) நிதியளித்தல் ஆகியவற்றுக்கு
எதிராக சர்வதேச இணக்கப்பாடுகளை பின்பற்றும் போது, நீதிமன்ற செயற்பாடுகளை
முன்னெடுப்பதற்கு அவசியமான வழிகாட்டல்களை உறுப்பு நாடுகளுக்கு வழங்கும்
நோக்கில் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிதி நடவடிக்கை செயலணியினால் பிராந்திய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 09
அலுவலகங்களின் ஊடாக 200 நாடுகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.
2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் நிதி நடவடிக்கைக் குழு
இலங்கையை “சாம்பல் பட்டியலில்” (Grey List) இணைத்திருந்ததோடு, ஐரோப்பிய
ஒன்றியமும் இலங்கையை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்தது.
இலங்கைக்கான மூன்றாவது அந்நியோன்ய மதிப்பீடு 2025 ஆம் ஆண்டு மார்ச்
மாதமளவில் முன்னெடுக்கப்படவிருக்கிறது. எனவே இலங்கையின் பணமோசடி மற்றும்
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலுக்கு எதிரான (AML/CFT) கட்டமைப்பில்
இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய வேண்டும்.
மூன்று நாள் விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி, பிரதம நீதியரசர்,
வெளிவிவகார அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்
உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் தூதுக்குழுவினர் கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கை தலைமைத்துவத்தினால் பொருளாதார மற்றும் சமூகப்
பாதுகாப்பிற்கான இந்த அந்நியோன்ய மதிப்பீட்டின் முக்கியத்துவம்
வலியுறுத்தப்பட்டது.
நிதி நடவடிக்கை குழு (FATF) இலங்கையை சாம்பல் பட்டியலில் இணைத்ததன் பலனாக
ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகளுக்கு தவிர்த்துக்கொள்வதற்கான
செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்தல் மற்றும் இலங்கையின் செயல்திறனை
மேம்படுத்துவதல் உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளவுள்ள பாதிப்புகளுக்கு திறம்பட ஈடுகொடுப்பதற்காக
நிதிமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலுக்கு எதிரான
கட்டமைப்பிற்கு காணப்படும் இயலுமை தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
உரிய நேரத்தில் சட்ட உருவாக்கம்
சரியான நேரத்தில் சட்ட உருவாக்கம்: நடவடிக்கைகளில் சரியான முடிவுகளை அடைய
தேவையான காரணிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நிதிமோசடி மற்றும்
பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு தொடர்பான சட்டத்திட்டங்களை துரிதமாக
நிறைவேற்றிக்கொள்ளல்.
வளங்கள்/ஒதுக்கீடுகள் : செயற்பாட்டின் பலன்களை அடைந்துகொள்வதற்காக
நிதிமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு செயற்பாடுகளுக்குக்கான
வளங்கள் மற்றும் ஒத்துக்கீடுகளை பெற்றுக்கொடுத்தல்.
நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு: செயல்திறன் மிக்க
தலைமைத்துவத்தின் கீழ், உள்ளக தொடர்பாடல்களை தக்கவைத்துக்கொள்ள மற்றும்
செயற்பாட்டுத் திட்டமிடலுக்கு அமைவான முன்னேற்றங்களை மேற்பார்வை செய்தல்
ஊடாக திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதற்கான சிறந்த பொறிமுறையை உருவாக்குதல்.
வழக்கு தொடுப்பவர்: நிதிமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு
செயற்பாடுகளுக்கு எதிரான வழக்கு தொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
நீதிமன்றம்: நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி
வழக்குகளுக்கு சரியான நேரத்தில் உரிய தீர்ப்புகளை வழங்குவதன் மூலம் சட்ட
நடவடிக்கைகளில் காணப்படும் தாமதங்களைத் தவிர்க்க நீதித்துறை அமைப்புகளின்
திறனை மேம்படுத்துதல்.
தனியார் துறை பங்களிப்பு: நிதிமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை
எதிர்க்கும் செயற்பாடுகளை முன்னுரிமையுடன் முன்னெடுக்கு முயற்சிக்கும்
அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்துகொள்ள தனியார் துறையின் பங்கேற்பை
ஊக்குவித்தல்.
சர்வதேச ஒத்துழைப்பு: செயல்திறனை வெளிப்படுத்தும்போது, அதற்கான எமது
முக்கிய வகிபாகத்தை அறிந்துகொண்டு சர்வதேச தொடர்புகளை பலப்படுத்திக்
கொள்ள வேண்டும். நிதி மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப்
போராடுவதில் ஏனைய நாடுகளின் அனுபவங்களை பெற்றுக்கொள்ளல்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உறுதியாக கடைப்பிடித்து 2025 ஆம் ஆண்டில்
அந்நியோன்ய மதிப்பீட்டுச் செயற்பாடுகளில் முன்னேற்றத்தை அடைந்துகொள்ளவும்
நிதி நடவடிக்கை குழுவினால் (FATF) இலங்கை சாம்பல் பட்டியலில்
இணைக்கப்பட்டுள்ளமையினால் ஏற்படக்கூடிய பாதகமான பொருளாதார விளைவுகளை
மட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
நிதி மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தலுக்கு எதிரான
(AML/CFT) கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சீர்செய்ய இருதரப்பும்
அர்பணிப்புடன் இருப்பதாகவும் மேற்படி விஜயத்தின் போது வலியுறுத்தப்பட்டது.